search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநின்றவூர் கொலை"

    திருநின்றவூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவி கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருநின்றவூர்:

    திருநின்றவூரை அடுத்த கொட்டாம்பேடு கொசவன்பாளையம் ஆற்றங்கரையில் கடந்த 16-ந்தேதி அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

    திருநின்றவூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் பிணமாக கிடந்தது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த குமார் (வயது40) என்பதும் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

    இதையடுத்து குமாரின் மனைவி செல்வி, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன், கூட்டாளிகள் அய்யனார், பூமிநாதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொலையுண்ட குமாருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    குமாரின் மனைவி செல்விக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. மணிகண்டன் திருநின்றவூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இதுபற்றி அறிந்த குமார் மனைவியை கண்டித்தார். எனினும் செல்வி கள்ளக்காதலை கைவிடாமல் இருந்தார்.

    இதற்கிடையே குமாருக்கு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை கிடைத்தது. இதனால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவர் குடும்பத்துடன் கூடுவாஞ்சேரிக்கு இடம் பெயர்ந்தார்.

    இதனை அறிந்த மணிகண்டன் அடிக்கடி செல்வியை சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தார்.

    மணிகண்டன் மீண்டும் நெருங்குவதை அறிந்த குமார் மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து கணவன் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்க முடியாது என்று நினைத்த செல்வி கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு கள்ளக்காதலன் மணிகண்டனும் ஒப்புக்கொண்டார்.

    கடந்த 10-ந்தேதி இரவு குமாருடன் பாசமாக இருப்பது போல் செல்வி நடித்து பாயாசம் தயாரித்து கொடுத்தார். அதில் தூக்க மாத்திரை கலந்து இருந்தார்.

    இதனை அறியாத குமார் பாயாசம் குடித்த சிறிது நேரத்தில் மயங்கினார். இதுபற்றி செல்வி கள்ளக்காதலனுக்கு தெரிவித்தார்.

    அப்பகுதியில் தயாராக நின்ற மணிகண்டன், தனது கூட்டாளிகளான உடன் வேலை பார்க்கும் அய்யனார், பூமிநாதன் ஆகியோருடன் குமாரின் வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் கயிற்றால் இறுக்கி குமாரை கொலை செய்தனர்.

    பின்னர் குமாரின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து திருநின்றவூர் கொசவன்பாளையம் ஆற்றில் புதைத்து தப்பி சென்று விட்டனர். பதட்டத்தில் உடல் அறை குறையாக புதைக்கப்பட்டதால் நாய்கள் வெளியே இழுத்தன. இதனால் துர்நாற்றம் வீசி உடல் வெளியே தெரிந்துவிட்டது.

    கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்பது குறித்து கைதான செல்வி உள்பட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்சூளையில் மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அவர்களுக்குள் சிறு சிறு தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கொலை பற்றி தெரிவித்து மிரட்டி வந்தனர்.

    இதனை கண்டு சந்தேகம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் கூட்டாளிகளுடன் சேர்ந்து குமாரை தீர்த்து கட்டியதை ஒப்புக்கொண்டார்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவி கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×